நகை திருட்டு குற்றவாளிகள் விரைவில் கைது செய்யபடுவர்-காவல் ஆணையர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் உள்ளது.நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொள்ளையில் சுமார் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக கடை முழுவதும் நடத்திய சோதனையில் ஏசி வெண்டிலேட்டர் மூலம் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் தொடர்ந்து நகைக்கடையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், சிசிடிவி காட்சியில் ஒருவர் மட்டுமே வந்து கொள்ளையடித்து சென்றிருப்பது பதிவாகி உள்ளது. இங்கேயே 12 நபர்கள் தங்கி உள்ள நிலையில் அவர்கள் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்கள். சம்பவ இடத்தில் தடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளியை பிடித்து விடலாம். சிசிடிவி ஆய்வு செய்யும் பொழுது ஒரு நபர் தான் தென்படுகிறார். கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் சுமார் 150 லிருந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சம்பவத்தில் ஈடப்பட்டவர் உள்ளே சென்ற பொழுது முகத்தை மறைத்ததாக தெரிகிறது ஆனால் முகமூடி எதுவும் போடவில்லை. தற்பொழுது ஆய்வு செய்த பட்சத்தில் ஏசி வென்டிலேட்டர் வழியாக சென்றதாக தெரிகிறது. அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதால் அந்த பணிகளை மேற்கொண்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடைகளுக்கு வெளியில் உள்ள கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்டவர் வெளியூர் காரர் போல் தெரியவில்லை, சம்பவத்தில் ஈடுபட்டவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிகிறது எனவே அவற்றையெல்லாம் ஆலோசித்து வருகிறோம். தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.