மேம்பாலம் திறக்கப்படாததை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திங்கள் வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதில், தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும் என்பதாலும், மேலும் சிறுவாச்சூர் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையைக் கடந்து செல்லும் போது, தொடர் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வந்ததால் அப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2018-ம் ஆண்டு முன்பு மத்திய இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி, சுமார் 13.03 கோடி மதிப்பீட்டில் வேலையை துவக்கி வைத்தார்.
ஆனால், ஆண்டுகள் பல கடந்த நிலையில் பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமாகி வந்தது,இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வரும் நிலையில், தற்போது வரை இந்த மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடையாமல் இருந்து வருகிறது, மேலும் மேம்பாலம் தரம் குறைவாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி பல்வேறு கட்சியினர் பொது அமைப்பினர்கள் போராட்டம் நடத்தியும் தற்போது வரை சிறுவாச்சூர் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், மேம்பாலத்தை திறக்க கோரி மத்திய அரசைக் கண்டித்து மதிமுக மாவட்டச் செயலாளர். S. ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட அக்கட்சியினர், மத்திய அரசுக்கு எதிரான கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் ஊர்ந்து செல்வதால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மேம்பாலம் பணியை முழுமைப்படுத்தி, விரைந்து பயன்பாட்டிற்கு திறந்து விட்டால், வாகன நெருக்கடி தவிர்ப்பதோடு, சாலையை கடப்பதால் ஏற்படும் விபத்தும் தவிர்க்கப்படும் என ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.