கர்ப்பிணி இறப்பு: கணவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர்
தேனி மாவட்டம் டொம்புச்சேரியை சேர்ந்த கர்ப்பிணி பெண் சரண்யா. இவருக்கும் எரசக்கநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவர் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதன் காரணமாக குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி டொம்புச்சேரி கிராமத்தில் கணவர் மனைவி இருவரையும் குடியமர்த்தினர்.
இந்நிலையில் கடந்த மாதம் 12 ஆம் தேதி சரண்யா இறந்து விட்டதாக வீரகுமார் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடத்திய பிரேத பரிசோதனையில் சரண்யா தலையில் பலத்த காயம் அடைந்த இறந்துள்ளார் என தெரியவந்தது. இதன் காரணமாக கர்ப்பிணியான சரண்யாவை அவரது கணவர் வீரகுமார் தான் கொலை செய்துள்ளார், அவரை உடனடியாக கைது செய்ய கோரி தமிழ் புலிகள் கட்சி சார்பாக உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.