வெள்ளி வியாபாரி கொலை விவகாரம் - முக்கிய குற்றவாளிகள் கேரளாவில் பதுங்கல்
வெள்ளி வியாபாரி கொலை
கேரளாவில் பதுங்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்ய விரைந்தனர்
வெள்ளி வியாபாரி கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). வெள்ளி வியாபாரி. இவர் கடந்த 2-ந் தேதி காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சங்கரின் தங்கை கணவர் சுபாஷ் பாபு என்பவர் கூலிப்படை மூலம் அவரை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய வேலாயுதம், நாகராஜ், பிரதாப் மற்றும் முனாப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடியின் இரட்டை சகோதரிகளான அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த லதா, கீதா (42) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளுக்கு வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக ேபாலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
Next Story