ராணிப்பேட்டை கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை அமைச்சராக காந்தி திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதி ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடத்தையும், பழைய மாங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதி ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடத்தையும், இதனைதொடர்ந்து வெ.கு மாங்காடு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிகளில் ரூ.55லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடத்தையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்தை ரிப்பம் வெட்டி குத்து விளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்துவைத்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும், புதிய பள்ளிக் கட்டடங்களை கட்டியும் வருகின்றார்.
மேலும், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கல்லூரிக் கனவு, புதுமைப் பெண், காலை உணவு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் இது போன்ற திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர நிலைக்கு வரவேண்டும். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.