தந்தையை கொன்ற மகன்

தந்தையை கொன்ற மகன்

கொலை

காரியாபட்டி அருகே சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை கட்டையால் அடித்து மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் நடுகாடான் (65). இவருக்கு 1 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மகன் மணிகண்டனுக்கு துலுக்கன்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இரண்டு மகள்களும் உள்ளூரில் வசிப்பதால் மகள்களுக்கு தந்தை நடுகடான் செலவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து நன்றாக பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் மணிகண்டனுக்கும் (35), நடுகாடானுக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக மகன் மணிகண்டன் அவரது தந்தை நடுக்கடானுடன் அவ்வப்பொழுது பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மல்லாங்கிணறு அருந்ததியர் காலனியில் வசித்து வரும் தந்தை நடுக்காடானை பார்க்க வந்த மகன் மணிகண்டன் சொத்தை பிரித்து தர வேண்டும் என பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை கைகலப்பானதில், ஒரு கட்டத்தில் மகன் மணிகண்டன் வீட்டின் முன்பு இருந்த பெரிய விறகு கட்டையால் தந்தை நடுக்காடானை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நடுக்காடானை அருகில் இருந்தவர்கள் மீட்டு மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் நடுக்காடான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தந்தையை தாக்கி தலைமறைவான மகன் மணிகண்டனை மல்லாங்கிணறு போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் விருதுநகர் அருகே தலைமறைவாக இருந்த மணிகண்டனை 2 மணி நேரத்தில் மல்லாங்கிணறு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story