குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை!
கழிவுநீர்
புதுக்கோட்டை நகரிலுள்ள பாப்பான் குளத்துக்குள் கழிவுநீர் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகரில் என்ஜிஓ குடியிருப்பு, நிஜாம் குடியிருப்பு, எஸ்எஸ் நகர், கோல்டன் நகர் போன்ற குடியிருப்புப் பகுதியில் உள்ளது பாப்பான்குளம்.
இப்போது முழுமையான பராமரிப்பில் இந்தக் குளம் இல்லாததால், புதர்போல மண்டிக் கிடக்கிறது என்றாலும் கழிவுநீர் இதில் இதுவரை கலப்பதில்லை என்கிறார்கள். ஆனால், கடந்த 3 நாள்களாக இந்தக் குளத்துக்கு வரும் வரத்து வாய்க்கால் மூலம் சாக்கடைக் கழிவுநீர் அதிகளவில் குளத்துக்குள் செல்வதாக மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து ஆனந்தாபாக் பொதுநலச் சங்கத்தின் தலைவர் சா. விஸ்வநாதன் கூறியது: இதுவரை மழைநீர் மட்டுமே வந்து கொண்டிருந்த வாய்க்காலில் கடந்த சில நாள்களாக கடுமையான துர்நாற்றத்துடன் சாக்கடைக் கழிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தண்ணீர் பாப்பான் குளத்தில் சேரும்போது, நிலத்தடி நீர் கெட்டுப்போகும். இந்தக் குளத்தைச் சுற்றிலும் சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அத்துடன் குடியிருப்புப் பகுதியில் துர்நாற்றம் அதிகரித்து தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது.ஏற்கெனவே இதுகுறித்து நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் அவர்களின் பணி போதுமானதாக இல்லை. கழிவுநீர் வரத்து கட்டுப்படுத்தப்படவில்லை என்றார் விஸ்வநாதன்.