திராவிட மாடல் அரசு உலக நாடுகளுக்கும் முன்மாதிரி:உதயநிதி ஸ்டாலின்
பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே திமுக வேட்பாளர் ச. முரசொலிக்கு ஆதரவாக வியாழக்கிழமை இரவு பிரசாரம் செய்த அவர் பேசியது: தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்துக்குத்தான் முதல் கையெழுத்தைப் போட்டார்.
இதன் மூலம் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் 460 கோடி பயணங்கள் மேற்கொண்டு, பயனடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.13.05 கோடிக்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
இதைப் பார்த்து கர்நாடக மாநிலத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி. இதேபோல, புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 லட்சம் கல்லூரி மாணவிகள் மாதம் ரூ. ஆயிரம் பெறுகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவிகள் பயனடைகின்றனர். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதைப் பார்த்து தெலங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைப் பார்த்து கனடா நாட்டிலும் அந்நாட்டு பிரதமர் அமல்படுத்தியுள்ளார். எனவே, இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழகத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 4.22 லட்சம் பயன்பெற்று வருகின்றனர். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
இதில், தஞ்சாவூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.
சந்திரசேகரன், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.