நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: உழவர் பெருந்தலைவர்
திமுக அரசு தமிழகத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியதால், நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பாக, விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெஸ்டாரன்டில் நடைபெற்றது. சங்க தலைவர் வேலுசாமி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வருவதற்காக, விவசாயிகளுக்கு பல்வேறு உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அவற்றை நம்பி ஓட்டுப்போட்ட விவசாயிகளுக்கு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆண்டிற்கான காவிரி பங்கீடு தண்ணீரை,
கர்நாடகா அரசிடம் இருந்து பெற்றுத் தராமல், தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் சிப்காட் மற்றும் 8 வழிச் சாலை அமைப்பதற்கு, மத்திய அரசுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, தமிழக விவசாயிகளிடம் கபட நாடகம் ஆடி வருகிறது. தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் விருப்பம் இல்லாமல், விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் எனக்கூறிய தமிழக அரசு, தி.மு.க., அமைச்சர் எ.வ.வேலு சிப்காட்டை ஆகாயத்தில் அமைக்க முடியாது,
கடையிலே அமைக்க முடியாது, விவசாய நிலங்களைத் தான் கையகப்படுத்துவோம் என கூறியுள்ளார். அதேபோல், மத்திய அரசும் விவசாயிகளுக்கு எந்த விதமான திட்டங்களையும் செய்யவில்லை. மாறாக விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு தகுந்த விலை அறிவிக்க வேண்டும் என போராடியவர்களை, ரப்பர் குண்டு, கண்ணீர் புகை கொண்டு தாக்கியது. விவசாயிகளை எதிரிகளைப் போல மத்திய அரசு நடத்துகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகள் விவசாயிகளை துரோகிகளை போல் நினைக்கின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று நீர் மேலாண்மைக்காக குடிமராமத்து திட்டம், வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீர் திட்டம், மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் ஏற்று அதனை செய்து கொடுத்தது.
இதுபோன்று விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அ.தி.மு.க., விற்கு, இந்த லோக்சபா தேர்தலில் எங்களின் ஆதரவை அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். எங்கள் சங்கத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு சங்கத்தினர் என, மொத்தம் 3 லட்சம் பேர் உள்ளனர். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில்,
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டளிப்போம் என அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, மாநில பொதுச்செயலாளர் S.பழனிமுருகன் மாநில பொருளாளர் S.ராஜேஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.