நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாம்
கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் NSIT, MGM & கோர் லாஜிக்ஸ்டிக்ஸ் நிறுவனங்கள் நாமக்கல் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியோர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று (மே-25) சனிக்கிழமை நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இம் முகாமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா பார்வையிட்டு கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவர்களிடம் அவர்களின் கண் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றி அக்கறையுடன் கேட்டறிந்தார்.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. இதில் நாமக்கல் பிஜிபி கல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவ, மாணவிகள் பொதுமக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கி உதவி செய்தனர். இதில் 600 க்கும் மேற்பட்ட முதியோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இலவசமாக கண் சிகிச்சை பெற்றதோடு அனைத்து பரிசோதனையும் பெற்றுக் கொண்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 200 க்கும் மேற்பட்ட நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்,
அனைவருக்கும் தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் ரூபாய் 1000 மதிப்புள்ள IOL லென்ஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. இம் முகாமில் நாமக்கல் செளத் இந்தியா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தலைவர் எம்.முருகேசன், எம்.நடராஜன், எம்.ராதாகிருஷ்ணன், ராஜேஷ் , அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் மேலாளர் கே.ஜவஹர் செய்திருந்தார்.