ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி
சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில், நேற்று காலை சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது, சாலையோரம் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டாலும் அவ்வழியாக கனரக வாகனங்கள், பஸ்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் சென்றன. வாகன போக்குவரத்து இல்லாத இடத்தை தேர்வு செய்து இதுபோன்ற ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்காமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களுக்கு ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, ஆபத்தை உணராமல் சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சியில் மாணவர்கள் செல்லும் வீடியோ தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.