இரண்டாம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்!

அரசு செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையின் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அகழாய்வு பணிகளை நேரில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை களில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தளம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குநராகக் கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர். 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வில் அமைவிடம் ஒன்றில் உள்ள அரண்மனை தீரலில் 14 புள்ளிகளும் அதன் அகலையில் ஒரு குழியும் அமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சுற்று கோட்டை கரையில் உள்ள செங்கல் கட்டிடக்கலை மற்றும் கட்டுமான முறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் அமைவிடம் இரண்டில் ஏழு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் இதுவரை வட்ட சில்லுகள், கெண்டி மூக்குகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் விளக்கு, தக்களிகள், எலும்பு முனை கருவிகள், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி உள்ளிட்ட 533 தொல்பொருட்களும், கீறல் குறியீடுகளும், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு மற்றும் வட்ட வடிவ செங்கல் கட்டுமானங்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் பங்கேற்றனர். இந்த அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது...

Tags

Next Story