மாவட்ட அரசு ரப்பா் கழக செயல்பாடுகள்: அமைச்சர் கலந்தாய்வு

X
குமரி மாவட்டம் வடசேரியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு ரப்பா் கழக செயல்பாடுகள் குறித்து வனத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் கலந்தாய்வு மேற்கொண்டாா். இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (துறைத் தலைவா்) சுதான்ஸு குப்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். ரப்பா் கழக அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள், மலைவாழ் கிராம மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சா் மதிவேந்தன் கலந்தாய்வு மேற்கொண்டு பேசியது: - ரப்பா் கழக அலுவலா்கள், தொழிலாளா்களின் முன்னேற்றத்துக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது. 2019ஆம் ஆண்டுமுதல் ரப்பா் மரம் வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை என ஒப்பந்ததாரா்கள் வைத்த கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலைக் கிராமங்களில் கொடிய விலங்குகள், பாம்பு உள்ளிட்ட விஷத்தன்மை கொண்ட பிராணிகள் மூலம் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என மலைவாழ் மக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனா். அதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். அரசு ரப்பா் கழக முதுநிலை கணினி மேலாளா் சி. கருணாநிதி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
Next Story

