திருக்கோவிலூரில் சாலையில் சுற்றுத் திரியும் குதிரைகள்
Thirukoilure King 24x7 |23 July 2024 4:46 AM GMT
அபாயம்
திருக்கோவிலூர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குதிரைகள் திருக்கோவிலூர்,23, ஜூலை திருக்கோவிலூர் பிரதான சாலையில் மாடு மற்றும் குதிரைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால், இவற்றை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் ஏராளமான மாடுகள், குதிரைகள் போக்குவரத்திற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக சுற்றி திரிகின்றன. இதனால், காலை நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோவில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களை அழைத்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்பட பலரை குதிரைகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையில் அதி வேகத்தில் ஓடுகின்றது. இதனால் உயிர் பயத்தில் தப்பி ஓடும் அவலநிலை உள்ளது. இதில் சிலர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். இதுபோன்று, சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகளை அவற்றின் உரிமையாளர்கள் பிடித்து அடைப்பதில்லை. இதனால், இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பொதுவாக சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குதிரைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் திருக்கோவிலூரில் வனத்துறையினர் அலுவலகம் அமைந்துள்ள ஹாஸ்பிடல் சாலையில் குதிரைகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வனத்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இதனால் பொதுமக்களின் உயிருக்கே குதிரைகளால் அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை எழுந்துள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, திருக்கோவிலூர் பகுதிகளில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story