காவேரிப்பாக்கம் மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்திரகலா.

ஆய்வு
காவேரிப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அதன்படி, காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும், மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவது குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து கழிவறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் தண்ணீர் வீணாவதை அறிந்து அதை முறையாக சேமித்து செடிகளுக்கு வழங்க வேண்டுமென பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு வந்து செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சாலை சீரமைப்புக்கு நடப்பாண்டு பணியில் எடுத்துக்கொள்ளப்பட்டது எனபேரூராட்சி அலுவலர்கள், ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, நெமிலி வட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.
Next Story