வாலாஜாவில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
Ranipet King 24x7 |24 July 2024 2:30 PM GMT
புகைப்பட கண்காட்சி
மத்திய அரசு இளைஞர்கள் முன்னேற்றம் அடைய பல்வேறு திட்டங்களின் மூலம் பயிற்சி வழங்கி இளைஞருடைய வாழ்வை முன்னேற்றம் அடைய செய்து வருவதாக மத்திய மக்கள் தொடர்பகம் மண்டல இயக்குனர் லீலா மீனாட்சி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள், மற்றும் இளமை திருமணத்தை தடுப்போம், திறன் இந்தியா மற்றும் ஊட்டச்சத்து குறித்தான புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு கள அலுவலர் ஜெய்கணேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய மக்கள் தொடர்பகம் மண்டல இயக்குனர் லீலா மீனாட்சி நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசியதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமாக குழந்தை திருமணம் நடைபெறுகிறது இதனை தடுக்க உங்கள் கையில் தான் உள்ளது ஏனென்றால் தீர்மானம் பண்ற இடத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள் ஆகவே நன்கு படித்து வாழ்வில் உயர வேண்டும். அதேபோல மத்திய அரசு சார்பில் முதல் பெண் குழந்தைக்கு ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாவது பெண் குழந்தைக்கு 6 ஆயிரம் ரூபாய் என வழங்குகிறது. மேலும் முத்ரா கடன் திட்டம் மூலம் தனி நபருக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்குகிறது எனவும், ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் இளைஞர்களுக்கு பல பயிற்சி வழங்கி இளைஞருடைய வாழ்வை முன்னேற்றம் அடைய செய்து வருவதாக தெரிவித்தார். ஆகவே இந்த புகைப்பட கண்காட்சியில் 26 வகையான திட்டங்களுக்கான புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது இதனை பார்த்து நீங்கள் பயனடைய வேண்டும் என கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசினார். தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, அஞ்சல் துறை, வங்கித் துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள மத்திய அரசு திட்டங்கள் குறித்தும் அதில் பயனடைவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்கள் பேசினர். இந்நிகழ்ச்சியில் அஞ்சலக கண்காணிப்பாளர் ஜெயசீலன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்ஜி குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அம்சபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story