வாகனம் ஓட்டும்போது நெஞ்சு வலி உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் ஓட்டுனர்

வெள்ளக்கோவிலில் பள்ளி வாகனம் ஓட்டும் போது நெஞ்சுவலி உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் ஓட்டுநர் - சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரல் 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (வயது 49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை வேனில் அழைத்து சென்றுள்ளார். அதே வேனில் மனைவி லலிதாவும் உதவியாளராக பணியாற்றிவருகின்றார். இந்நிலையில் வேன் வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு வேன் ஸ்டேரிங்கில் மயங்கி சரிந்து விழுந்தார். இதைக் கண்ட பள்ளி மாணவ மாணவிகள் பயத்தில் அலறி அடித்தனர்.மனைவி லலிதாவும் கதறினார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் என்னமோ எதோ என பதறிஅடித்துக்கொண்டு வேனில் உள்ளே சென்று பார்த்துவிட்டு  உடனடியாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் சேமலையப்பனை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர். வேன் ஓட்டும் போதே நெஞ்சுவலி வந்து மயங்கி விழும் நிலையிலும் வேனில்உள்ள  குழந்தைகளின் உயிரை காப்பாற்றி விட்டு தன் உயிரை விட்டதாக  வெள்ளகோவில்,காங்கேயம் பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இறந்து போன சேமலையப்பனுக்கு உமா, ஜானகி, லலிதா ஆகிய மூன்று மனைவிகள் உள்ளனர் தற்போது லலிதா மட்டும் இவருடன் உள்ளார். லலிதாவிற்கு ஹரிஹரன் (வயது 17) ஹரிணி (வயது 15) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர் சம்பவம் பற்றி லலிதா கொடுத்த புகாரின்  பேரில் காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story