தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி தேவையை ஒன்றிய அரசிடமிருந்து பெற தமிழ்நாடு பாஜக ஆக்கப்பூர்வமாக இணைந்து பணியாற்ற வேண்டும். எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை
Tiruchengode King 24x7 |25 July 2024 8:04 AM GMT
தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி தேவையை ஒன்றிய அரசிடமிருந்து பெற தமிழ்நாடு பாஜக ஆக்கப்பூர்வமாக இணைந்து பணியாற்ற வேண்டும். எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை
தமிழ்நாடு என்று பெயரை குறிப்பிடவில்லை என்று சொன்னால் தமிழ்நாட்டிற்கான திட்டங்களை கொடுக்கவில்லை, தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்கவில்லை என்பதுதான் அர்த்தம். உண்மை அப்படி இருக்க பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் ஏதோ தமிழ்நாடு பெயரே இல்லை என்று வருத்தப்படுவதாக அதை திசை திருப்புகிறார்கள். பலமுறை ஆந்திரா மாநிலத்தினுடைய பெயரையும், பீகார் மாநிலத்தினுடைய பெயரையும் குறிப்பிட்டு திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். வெறும் பெயரை குறிப்பிடுவது நம்முடைய ஆசை அல்ல. தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருந்தால் தமிழ்நாட்டினுடைய பெயரும் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையிலே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான எதிர்பார்ப்புகளான வெள்ள நிவாரணத்திற்கு நிதி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்க்கான இரண்டாம் கட்ட நிதி, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயிலுக்கான அனுமதி இப்படி பல்வேறு வகையான திட்டங்களுக்கு எந்த அறிவிப்புகளும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் பட்ஜெட்டுக்கு முன்பாகவே தன்னுடைய கோரிக்கைகளை வரிசையாக வைத்துள்ளார். சென்னை மாநகரத்துக்கு பல மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்ற காரணத்தினால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க நிதி வேண்டுமென்று இன்று, நேற்று கேட்டதல்ல. தமிழ்நாட்டினுடைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் மரியாதைக்குரிய திரு ஏ.வ.வேலு அவர்கள் பலமுறை டெல்லிக்கு சென்று இந்த திட்டத்திற்கான அனுமதியை கேட்டிருக்கிறார். இதற்கு நிதி ஒதுக்கவில்லை என்பது ஒரு புறம். பல ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரவாயல் - சென்னை துறைமுக மேம்பாலம் திட்டத்திற்கும் இன்னும் எந்த ஒரு ஆக்கபூர்வமான வேலைகளும் செய்யப்படவில்லை. ஓசூரிலே விமான நிலையம் கேட்டு இருக்கிறோம். அதற்கும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டிலேயே சிறு, குறு தொழில்கள் ஜவுளி துறையை சார்ந்த நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து கொண்டிருக்கின்றன. அவற்றை காப்பாற்றுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் ஒன்றிய அரசினுடைய பட்ஜெட்டிலே இல்லை. தொழில் வளர்ச்சி என்று சொன்னால் ஏதோ புதிதாக தொழில் பூங்காக்களை அமைப்பது என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்ற சிறு, குறு தொழில்கள் இன்று நடத்த முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். அதற்கான தீர்வு அறிவிக்கப்படவில்லை. சிறு, குறு தொழில்களுக்கு 45 நாட்களுக்குள் பேமென்ட் தரவில்லை என்று சொன்னால் வருமான வரியிலே அது செலவாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற அந்த அறிவிப்பு சிறு, குறு தொழில்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து வருகின்ற அந்த ஆர்டர்களை இன்று நிறுத்தி இருக்கிறது. அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. வரி வசூலிக்கின்ற ஜிஎஸ்டியின் சார்பாக கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளுக்கான பல்வேறு விஷயங்களை தேடி கண்டுபிடித்து இன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்தும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான எந்த விதமான ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. இப்படி பல்வேறு விஷயங்களை தமிழ்நாட்டின் சார்பாக முதலமைச்சரும், அமைச்சரும் கோரிக்கைகளாக வைத்திருக்கின்றார்கள். தமிழகத்தை சார்ந்த அரசியல் கட்சிகளும் இன்றைக்கு பல்வேறு விஷயங்களை கோரிக்கைகளாக கேட்டிருக்கிறோம். ஆனால் எதையும் அறிவிக்காமல் மொத்தமாக புறக்கணித்துவிட்டு தமிழ்நாடு என்ற பெயரை கேட்கின்றார்களே என்று திசைதிருப்புகின்ற அந்த வேலையை நிறுத்துங்கள். இன்றைக்கு ஒன்றிய அமைச்சர் தமிழ்நாட்டிற்கு இவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதெல்லாம் நடந்து கொண்டிருக்கின்ற திட்டங்களுக்கு தொடர் நடவடிக்கைகளுக்காக கொடுக்கப்படுகின்ற நிதி. அதைத்தான் இவர்கள் இப்போது ஒதுக்கியது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பக்கம் இவ்வளவு தவறுகளை வைத்துக்கொண்டு தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டுமென்று சொல்கிறார். பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் என்றைக்கு ஆக்கப்பூர்வமாக பேசியிருக்கிறார். அவர் சார்ந்த கொங்கு மண்டல பகுதிகளில் தான் ஜவுளி துறையை சார்ந்த பல நிறுவனங்கள் சிரமத்தில் இருக்கிறது. கோயம்புத்தூரில் தேர்தலில் நின்ற போது அத்தனை பிரச்சனையும் நான் தீர்த்து வைப்பேன் என்று சொன்னீர்கள். நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியும் ஆனால் டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். டெல்லிக்கு சென்று தொழிற்சாலைகளுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அறிவிப்புகளை இந்த நிதிநிலை அறிக்கையிலே நீங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அது அக்கப்பூர்வமான பணிகள் அல்லவா. முழு நேரமும் ஆக்கப்பூர்வமில்லாத பேச்சுகளை பேசிக்கொண்டு மற்றவர்களை ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் என்று சொல்வது மக்கள் மத்தியில் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் ஆக்கப்பூர்வமாக நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு ஒன்றிய அரசு உதவியாக இருக்கும் என்ற கருத்துக்களை உள்வாங்கி ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும். தமிழ்நாடு இந்தியாவிலேயே இன்றைக்கு கடின உழைப்பு உழைக்கின்ற மக்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது. இந்திய அரசிற்கு வரி வருவாய் அதிகமாக தருகிறது. வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற பல துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது. அப்படி இருக்கின்ற தமிழ்நாட்டினுடைய பெயரை நீங்கள் குறிப்பிட்டால் உங்களுக்கு தான் பெருமை. நீங்கள் தமிழ்நாட்டினுடைய பெயரை அங்கு குறிப்பிடுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பெருமையும் இல்லை. எங்களுக்கு தேவையானது திட்டங்கள். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு தேவையான நிதி அதை கேட்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பணி. தமிழ்நாட்டை சார்ந்த அரசியல் கட்சிகளின் பணியும் இதுதான். எங்களுடைய ஆக்கபூர்வமான பணியும் இதுதான். அதைப் புரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் ஆக்கப்பூர்வமான பேச்சுகளை மட்டுமே பேச வேண்டும் என எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்
Next Story