சேலத்தில் காணாமல் போன அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கார் டிரைவரின் மகன்

சேலத்தில் காணாமல் போன அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கார் டிரைவரின் மகன்
கிணற்றில் பிணமாக மீட்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அமரகுந்தி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 32). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு கன்னங்குறிச்சி பகுதியில் நிலம் உள்ளது. இதனால் அங்கு நடந்து வரும் கட்டிட பணியை மேற்பார்வையிட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் வந்துள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேசன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது தந்தை செல்வம், கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன வெங்கடேசனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கன்னங்குறிச்சி பகுதியில் ஒரு கிணற்றில் வெங்கடேசன் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளதார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு நிலைய படையினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன வெங்கடேசனின் தந்தை செல்வம், ஓமலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.மணியிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கார் டிரைவரின் மகன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story