வைக்கோல் கட்டு விலை உயர்வு கால்நடை வளர்ப்பு தவிப்பு
Sivagangai King 24x7 |25 July 2024 9:19 AM GMT
சிவகங்கையில் தட்டுப்பாடு காரணமாக வைக்கோல் கட்டு விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், கொந்தகை, கீழடி, கட்டமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கோ 51, என்.எல்.ஆர், ஆர்.என்.ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுவது வழக்கம், ஜனவரியில் அறுவடை தொடங்குவதால் அப்போது வைக்கோல் அதிகம் கிடைக்கும். பசு மாடு, காளை மாடு, எருமை மாடு வளர்ப்பவர்கள் மொத்தமாக வைக்கோல் கட்டுகளை வாங்கி வைத்து பயன்படுத்துவார்கள்.ஏக்கருக்கு 35 முதல் 50 கட்டு வைக்கோல் வரை கிடைக்கும், நெல் ரகங்களை பொறுத்து இது மாறுபடும். வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் பலரும் நெல் பயிரிடுவது வழக்கம், மழை பெய்யாவிட்டாலும் வைகை அணையில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பதால் ஓரளவிற்கு விளைச்சல் கிடைக்கும்.ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை காலத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகளிடம் வைக்கோல் கட்டுகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து கொள்வார்கள், கோடை விவசாயத்தை பெரும்பாலும் பம்ப்செட் கிணறு வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே மேற்கொள்வார்கள். திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு கடும் கோடை வெயில் காரணமாக 300 ஏக்கரில் மட்டுமே நடவு பணிகள் நடந்தன. இதனால் போதிய விளைச்சல் இன்றி வைக்கோலும் குறைந்து விட்டன. 35 கட்டுகள் கிடைக்கும் இடத்தில் 20 முதல் 22 கட்டுகள் வரையே கிடைக்கின்றன.அதனை வாங்குவதற்கு பெங்களுர் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்ததால் விலை உயர்ந்துள்ளது. கேரளாவில் நெல் விவசாயம் இல்லாததால் கால்நடைகளுக்கு தமிழகத்தில் இருந்துதான் வைக்கோல் கொண்டு செல்கின்றனர். ஒரு லாரியில் அதிகபட்சம் 165 கட்டுகள் வரை ஏற்றலாம் என்பதால் வியாபாரிகள் வைக்கோல் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் வரை ஒரு கட்டு 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.வியாபாரிகள் கூறுகையில்: பெங்களுர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப செல்லும் போது வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்கின்றனர். தமிழகத்தில் 80 ரூபாய்க்கு வாங்கப்படும் வைக்கோல் கட்டுகள் கேரளா, பெங்களூருவில் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்துள்ளதால் வைக்கோல் கட்டு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளியூர் வியாபாரிகள் விலை கூடுதலாக வழங்குவதால் விவசாயிகள் வெளி மாநில வியாபாரிகளிடமே வைக்கோல் கட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உள்ளுரில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு வைக்கோல் கிடைக்கும் சிரமப்பட்டு வருகிறார்கள்
Next Story