புதிய ஐந்து தடங்கலுக்கு ஐந்து பேருந்து சேவையினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
Ranipet King 24x7 |26 July 2024 2:10 PM GMT
புதிய பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து பணியாளர்கள் தங்களது குடும்பங்களின் நலனை கூட பொருட்படுத்தாமல் பணியை மேற்கொண்டு வருவதால் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது - தமிழகத்தில் புதிதாக 7200 பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதலாக 5 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவையினை அமைச்சர்கள் ஆர்.காந்தி, சிவசங்கரன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். சென்னை, பெங்களூரு, கலவை, சோளிங்கர், திருத்தணி, உள்ளிட்ட 5 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து அனுப்பி வைத்தனர். முன்னதாக போக்குவரத்து துறை ஊழியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் சிவசங்கரன், நேற்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்றாமல் சென்றது குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்து துறை ஊழியர்கள் தங்களது குடும்பத்தின் நலனை கூட பொருட்படுத்தாமல் உழைத்து வருவதால் தான் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாக தெரிவித்தார். தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதோடு, உரிய நிதி ஒதுக்குவதாக கூறினார். பிற மாநிலங்களில் சமபளம் கேட்டு போராடினால் வேலையை விட்டு அனுப்பி விடுவதாக சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்து ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக 7200 பேருந்துகளை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், இந்த வாரம் 300 பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் போய் அடைந்த பேருந்துகளுக்கு மாற்றாக 5 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கூடிய விரைவில் கூடுதலாக பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக கூறினார். .
Next Story