சாலையில் திடீர் பிளவு

பிளவு
அரகண்டநல்லுாரில் இருந்து புத்துார், பரனுார், ஆற்காடு வழியாக ஆயந்துார் வரை செல்லும் சாலை பல கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். மிக குறுகலான இச்சாலை கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இச்சாலை, தற்போதைய போக்குவரத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வகையில் குறுகலாக இருப்பதால் இதனை மேலும் அகலப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து முதல்கட்டமாக அரகண்டநல்லுாரில் இருந்து 5 கி.மீ., துாரத்திற்கு புத்துார் வரை 3.5 மீட்டர் அகலம் உள்ள சாலையை 5 மீட்டர் அகலமாக விரிவுபடுத்தி மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. ஒப்பந்ததாரர் காலம் கடத்தி பணியை மேற்கொண்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் 5 மீட்டருக்கு குறைவாகவே சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்துவதற்கு பதில், ஏற்கனவே சாலை அகலமாக இருக்கும் இடங்களில் மட்டும் ஐந்து மீட்டர் அளவிற்கு மண் கொட்டி சாலையை விரிவு படுத்தியுள்ளனர். இடம் குறைவான பகுதியில் சிறிதளவு அகலப்படுத்தி 5 மீட்டருக்கும் குறைவான அளவில் சாலை போடப்பட்டுள்ளது. அத்துடன் சாலை ஓரத்தில் குறிப்பிட்ட மீட்டர் அகலத்திற்கு மண் அணைக்க வேண்டும். இதையும் தவிர்த்து விட்டனர். இதன் காரணமாக பல இடங்களில் சாலை மிகக் குறுகலாகவும், சில இடங்களில் சாலை போட்ட உடனேயே பள்ளத்தில் சரிந்தும் காணப்படுகிறது. கொல்லூர் காலனி பகுதி மக்கள் அளவீடு செய்து ஒப்பந்தப்படி அகலப்படுத்தி சாலை அமைக்க கோரி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், ஒப்பந்ததாரர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. அதிகாரிகள் இச்சாலையை நேரில் ஆய்வு செய்து ஒப்பந்தபடி சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பதை, அளவீடு செய்து, அனைத்து பகுதிகளும் ஐந்து மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story