காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை

காவிரி கரையோர பகுதிகளில்  மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பி, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்திற்கும் மேலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டி, நகராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, பாலக்கரை, அண்ணா நகர், கலைமகள் வீதி உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அங்குள்ள பொதுமக்களை சந்தித்து, மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டி கேட்டுக்கொண்டார். குடியிருப்பு வாசிகள் வேறு இடம் கேட்டு கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் தங்க வைக்க கூடிய பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் இவர் கூறியதாவது: காவிரியில் நீர்வரத்து அதிகம் ஆகி வருவதால், காவிரி கரையோர பகுதி மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க வேண்டி வருவாய்த்துறையினரிடம் கூறியுள்ளேன். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் வரத்து குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆர்.டி.ஒ. சுகந்தி, தாசில்தார் சிவகுமார், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஒ.க்கள் முருகன், செந்தில், தி.மு.க. தெற்கு நகர செயலர் ஞானசேகரன், நிர்வாகி ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story