ஆடிக்கிருத்திகை சிவன் மலை கோயில்களில் சாமி தரிசனம்
Kangeyam King 24x7 |30 July 2024 5:33 AM GMT
ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிவன்மலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனம்
ஆடி மாத கிருத்திகை நாளை முன்னிட்டு காங்கயம் அருகேயுள்ள, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை கோயிலில் முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. நேற்று ஆடி மாத கிருத்திகை நாளை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சந்தானம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தீர்த்தம் உட்பட 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மதியம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் அதிகாலை முதலே காங்கேயம், திருப்பூர், படியூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story