சேலத்தில் அடுத்த மாதம் அரசு பொருட்காட்சி நடைபெற இருக்கிறது
Salem (west) King 24x7 |30 July 2024 8:22 AM GMT
கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்
சேலம் போஸ் மைதானத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) அரசு பொருட்காட்சி தொடங்குகிறது. முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறும். இதில் அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து மென்மேலும் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, செய்தி-மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அரசு நிதி ஒதுக்கீடு மூலம் கண்காட்சியில் இடம் பெறும். அதேபோன்று நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மாசு கட்டுப்பாடு வாரியம், ஆவின், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட துறைகள் அந்த துறைகளின் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி பொருட்காட்சியில் பங்கு பெறும். பொருட்காட்சி திடலில் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பிட உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த போலீசார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story