நாசரேத்தில் தனி தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும்!
Thoothukudi King 24x7 |30 July 2024 12:43 PM GMT
நாசரேத்தில் தனி தாலுகா புதிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகர வியாபாரிகள் சங்க 48 வது ஆண்டு விழா டூவிங்கிள் மஹாலில் நடந்தது.சங்க தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஞானையா வரவேற்றார். சங்க பொதுச்செயலாளர் அசுபதிசந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ஜெயக்குமார் தணிக்கை அறிக்கையை வாசித்தார். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வைகுண்ட தாஸ் வாழ்த்திப்பேசினார். கூட்டத்தில் நெல்லை சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு செல்வதற்கு வசதியாக திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் இயக்க வேண்டும், நாசரேத்தில் இயங்கி வந்த கூட்டுறவு நூற்பாலை பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. இதனை மீண்டும் இயக்க கோரி பல மனுக்கள் மூலம் அரசை கேட்டும் இதுவரை மீண்டும் திறக்கப்படவில்லை. தற்சமயம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நியோ டைடல்பார்க் தொடங்குவதற்கு அரசு அறிவித்து உள்ளது. புதிதாக நியோ டைடல் பார்க்கை நாசரேத் கூட்டுறவு நூற்பாலை இயங்கிவந்த இடத்தில் அமைக்கவும், நாசரேத்தை தனி தாலுகாவாக்கவும், நாசரேத்தில் புதிதாக அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அருணா எம். குமரன் குழுவினர் சார்பில் மருதம் திரைப்பட இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவில் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க இணைச்செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.
Next Story