தற்கொலைக்கு முயற்சி: யூடியுபர் கைது!
Thoothukudi King 24x7 |30 July 2024 12:45 PM GMT
ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சி: வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப முயன்ற யூடியுபர் கைது!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலப்பிரச்சனை சம்பந்தமாக மனு கொடுக்க வந்தவரை தற்கொலைக்கு முயற்சி செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப முயன்ற யூடியுபர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்த இளையபெருமாள் மகன் பாஸ்கர் (52) என்பவர் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்த போது திடீரென எளிதில் தீப்பற்ற கூடிய தின்னர் எனும் திரவத்தை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் காவல் நிலைய முதல் நிலை காவலர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் உடனடியாக பாஸ்கரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டதில், பாஸ்கருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே நடைபாதை சம்பந்தமாக நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மேற்படி பாஸ்கர் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக புறப்பட்டபோது ஆழ்வார்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் விக்னேஸ்வரன் (30) என்பவர் தான் நடத்தி வரும் யூடியுப் சேனலின் அதிக லைக் பெரும் ஆதாயத்திற்காக, பாஸ்கரிடம் இதுபோன்று புகார் மனு கொடுத்தால் மட்டும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். உங்கள் மீது தீ வைத்துக் கொள்வது போல் செய்யுங்கள் அப்போது நான் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்புகிறேன் அப்போதுதான் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறியதால் மேற்படி பாஸ்கர் தின்னரை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) வனசுந்தர் வழக்குபதிவு செய்து விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story