திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது காவிரி தண்ணீர்- விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…!

காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அதைத்தொடர்ந்து இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டன. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவுக்காக நேற்று முன்தினம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று(30-07-2024) காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்று மாலை கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மாயனூர் தடுப்பணைக்கு வந்து மாலை முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள் தண்ணீரின் மீது மலர்களை தூவி உரத்த குரல் எழுப்பி வரவேற்றனர். முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் தண்ணீர் இன்று மாலை அல்லது நாளை காலை திறக்கப்படும் என்று தெரிகிறது. தற்போதைய நிலையில் மாயனூர் கதவணையில் 6000 கன அடி தண்ணீர் மட்டுமே நமக்கு வந்து கொண்டிருக்கிறது. இது நேரம் செல்ல செல்ல படிப்படியாக உயரும். நாளை முக்கொம்பு மேலணைக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் அதிகபட்சமாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட முடியும். அதற்கு மேலாக உபரி நீர் வந்தால் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும். இதுதொடர்பாக ஏற்கனவே காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story