நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
Pudukkottai King 24x7 |31 July 2024 3:53 AM GMT
அரசியல் செய்திகள்
திமுகவின் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்கட்சி மோதலால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நகராட்சி ஆணையரை நியமிக்க முடியாமல் நகராட்சி பணிகள் அனைத்தும் தேங்கியுள்ளதாக நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.. நகராட்சியில் மக்கள் பணிக்காக வாங்கிய இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் கடந்த சில வருடங்களாக பயன்பாட்டிற்கு வராததால் சாம்பிராணி போட்டு பூஜை செய்யுங்கள் என அதிமுக நகர்மன்ற உறுப்பினர் பேச்சு... புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் திமுக கட்சியின் நகர்மன்ற தலைவர் ஆனந்த் தலைமையில் இன்று நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளுக்கு வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசி வந்தனர். அப்பொழுது பேசிய சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர் விசுவமூர்த்தி என்பவர் கூறுகையில் நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து அலுவலகத்தில் எந்த குறிப்புகள் இல்லை என்றும் இது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி கேட்டால் அவர்கள் எந்தவித பதிலையும் தங்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டி பேசினார். இந்த அவலநிலைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக அறந்தாங்கி நகராட்சிக்காக நிரந்தரமாக ஒரு ஆணையரை நியமிக்காதே காரணம் என்று விளக்கி பேசினார்.அப்பொழுது குறுக்கிட்ட திமுக கட்சியின் நகர் மன்ற துணைத் தலைவர் முத்து என்பவர் சுயேட்சை கவுன்சிலர் தங்கள் அரசின் மீது குறை கூறுவதாகவும் ஒட்டுமொத்த அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் குறித்து அவர் பேச உரிமை இல்லை என்று வாதம் செய்தார். இதனைக் கேட்ட மற்ற சுயேட்சை கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் நகர்மன்ற துணைத் தலைவருக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு, நகர்மன்ற தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசால் நியமிக்கப்படும் நகராட்சி ஆணையர்களை மாற்றி வருவதால் கடந்த சில மாதங்களாக நிலையான ஆணையர் இல்லாத அவல நிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆட்சி காலத்தில் நமது பகுதிக்கு இரண்டு அமைச்சர்களை வைத்திருந்தும் நம்மால் நகராட்சி நிர்வாகத்திற்கு என்று ஒரு நிரந்தரமான ஆணையரை நியமிக்க முடியவில்லை என்றும், அவர் இல்லாத காரணத்தால் நகராட்சி பணிகள் அனைத்தும் கிடப்பில் கிடப்பதாக குற்றம் சாட்டினர். இப்படி திமுக கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் வாதம் செய்து கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்ட அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கலையரசி மண்டலமுத்து பேசுகையில் திமுகவின் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரின் உட்கட்சி மோதலால் அறந்தாங்கி நகராட்சிக்கு வருகை தரும் ஆணையர்கள் பந்தாடப்படுவதாகவும்,அதனால் நகராட்சி பணிகள் அனைத்தும் தேங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதற்கு சான்றாக அறந்தாங்கி நகராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக வாங்கப்பட்ட இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் ஆர்டிஓ ஆபீஸில் பதிவு செய்யப்படாமல் கிடப்பில் கிடப்பதால் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை என்றும் அதற்கு வாராவாரம் சாம்பிராணி போட்டு பூஜையாவது செய்யுங்கள் அந்த இயந்திரங்களை கடவுளாவது பாதுகாக்கட்டும் என்று ஆவேசமாக கூறினார். மேலும் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நகர்மன்ற கூட்டத்திற்கு நிரந்தரமான ஆணையரை இந்த திமுக அரசின் நகராட்சி நிர்வாக நியமிக்கவில்லை என்றால் நகர்மன்ற கூட்டத்தை புறக்கணிப்போம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்..
Next Story