திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
Tiruchirappalli (East) King 24x7 |1 Aug 2024 9:41 AM GMT
வாகனங்கள் அனைத்தும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றம்
. கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து48ஆயிரத்து 917 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 70 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. முக்கொம்புக்கு இன்று காலை காலை 8 மணிக்கு 96ஆயிரத்து 573 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதில் 31,178 கனஅடி தண்ணீர் காவிரியிலும், 64,395 கனஅடி கொள்ளிடத்திலும் பிரித்து அனுப்பப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 7,010 கனஅடியும், வெண்ணாற்றில் 1,505 கனஅடியும், கல்லணை கால்வாயில் 501 கனஅடியும் திறக்கப்படுகிறது. கல்லணையில் இருந்து வினாடிக்கு வினாடிக்கு 7,385 கனஅடி தண்ணீர் கொள்ளிடத்திற்கும் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடத்தில் மொத்தம் 71,680 கனஅடி தண்ணீர் செல்கிறது. கொள்ளிடத்தில் வெள்ளம் அதிகரித்ததால் ஸ்ரீரங்கம் அருகே உள்ள மின் கோபுரத்தின் தூண்கள் தனது நி்லையில் இருந்து இறங்கி சாய்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின் கோபுரத்தின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சாரம் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் கொள்ளிடம் பாலத்தில் இன்று பிற்பகல் முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த மின்கோபுரம் சாய்ந்தால் அதன் ஒயர்கள் பாலத்தில் தான் விழும் என்பதால் பெரிய ஆபத்துக்கள் நேரிடாமல் தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் நேப்பியர் பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் கொண்டயம்பேட்டை பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. பாலத்தின் இரு மருங்கிலும் போலீசார் பேரிகார்டு அமைத்து தடை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து வாகனங்களும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கிறது. மேட்டூர் அணைக்கு இன்று மாலை வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளிலும் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று மாலை மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்பதால், முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட அனைத்து தடுப்பணைகளிலும், கொள்ளிடக்கரைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்
Next Story