எளிய முறைகளை தெரிந்து கொண்டால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்
Salem (west) King 24x7 |2 Aug 2024 9:51 AM GMT
மாணவர்களுக்கு, மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் அறிவுரை
சேலம் மாநகராட்சி அய்யந்திருமாளிகையில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்ட அறிவு சார் மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அங்கு அரசு போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அதன் பிறகு அவர் கூறியதாவது:- மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாசிப்பு, ஸ்மார்ட் வகுப்பு, கணினி மையம், நூலக அறைகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே சேலம் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு போட்டி தேர்வு வருடத்திற்கு 4 அல்லது 5 முறை நடைபெறும். 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை போட்டித்தேர்வு எழுதலாம். 10-ம் வகுப்பு படித்தவர்கள் தேர்வு எழுதும் போதும், பட்டப்படிப்பு படித்தவர்கள் தேர்வு எழுதும்போதும், அதற்கான பாடத்தை படித்தால் போதுமானது. இது தவிர தினசரி பேப்பர்கள், தொலைக்காட்சியில் வரும் செய்திகள் இதர தகவல்களை தெரிந்து கொண்டு அதிலும் கவனம் செலுத்த வேண்டும். கணக்கு தேர்வு எழுதும்போது அதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எளிய முறைகளை தெரிந்து கொண்டு தேர்வு எழுதினால், போட்டித்தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story