அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் (02.08.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அவர்களை பாடப்புத்தகங்களை வாசிக்க செய்தும், அப்போது ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்த தகவல்களை கூறச்சொல்லியும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை குறித்தும், அப்பள்ளியில் ஆய்வகங்களும், வகுப்பறைகளும் போதிய அளவில் உள்ளதா, பள்ளி வளாகத்தூய்மை, கழிவறை தூய்மை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்தார். பின்னர் குன்னம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் 4ஆம் வகுப்பில் கணிதம் தொடர்பாக மாணவர்களிடம் கேள்வி கேட்டும், அதற்கான விடைகளை கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் கற்பித்தார். அப்போது கேள்விகளுக்கு சரியாக விடையளித்த மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். மாணவர்களுக்கு எளிமையான முறையில், புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் தொடக்கப் பள்ளியில் எத்தனை மாணவர்கள், காலை உணவு, மதிய உணவு சாப்பிடுகிறார்கள், இன்று வருகை புரிந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, மதிய உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஸ்மார்ட் போர்டு இல்லாமல் இருப்பதை பார்த்து, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு வந்துள்ளது, எத்தனை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது, அதில் என்னென்ன வசதிகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது என உரிய அறிக்கை தர வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் கழிவறைகளை புதிதாக கட்டிட வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story