பல்லுயிர் பாதுகாப்பு கருத்தரங்கம்: வனக்கோட்டத்திற்கு விருது!.
Thoothukudi King 24x7 |3 Aug 2024 3:23 AM GMT
கோயம்புத்தூரில் நடைபெற்ற "பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு" பற்றிய பயிலரங்கத்தில் தூத்துக்குடி வனக்கோட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது...
கோயம்புத்தூரில் நடைபெற்ற "பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு" பற்றிய பயிலரங்கத்தில் தூத்துக்குடி வனக்கோட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது. கோவை வனக்கல்லூரி வளாகத்தில், பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த 2 நாள்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் வனத் துறை செயலா் செந்தில்குமாா் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினாா். இதில், சிறப்பு விருந்தினராக புது தில்லியில் உள்ள ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமையின் இந்திய அலுவலக மேம்பாட்டுப் பிரிவு நிபுணா் சித்தாா்த் பரமேஸ்வரன் பங்கேற்று பேசினார். தமிழ்நாடு வனத் துறையின் அனைத்து மூத்த அதிகாரிகள், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் பணிகளைச் செயல்படுத்தும் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப் பாதுகாவலர், வாழ்விட மறுசீரமைப்பு, புல்வெளி மறுசீரமைப்பு, பாதுகாப்பு போன்ற துறைகளில் வல்லுநர்கள் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில்,களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், திருநெல்வேலி மண்டலம், தூத்துக்குடி வனக்கோட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான "புல்வெளி மறுசீரமைப்பு" யை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த கோட்ட மேலாண்மை அலகு (DMU) விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்குட்பட்ட வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 20 ஹெக்டேர் பரப்பளவில் புல்வெளி சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த புல்வெளி மறுசீரமைப்பு பணி, வல்லநாடு வெளிமான் சரணாலயத்திற்கு புது உயிர்ப்பை அளித்துள்ளது. வெளிமான்கள், புள்ளிமான்கள் மற்றும் கடமான்கள் சரணாலயத்திற்குள் புதிதாக புனரமைக்கப்பட்ட புல்வெளியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. நடப்பு நிதியாண்டிலும் (2024-25) இதேபோன்ற புல்வெளி சீரமைப்புப் பணிகள் வல்லநாடு வெளிமான் சரணாலயத்திற்குள் பொருத்தமான இடங்களில் மேற்கொள்ளப்படும். வனவிலங்குகளின் வாழ்விடங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதில் இந்தப் பணிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
Next Story