சேலம் கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழாவையொட்டி
Salem (west) King 24x7 |5 Aug 2024 3:47 AM GMT
மாநகரில் போக்குவரத்து மாற்றம்
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவின் முக்கிய விழாவான சக்தி கரகம் அழைத்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 9-ந்தேதி வரை 3 நாட்கள் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. எனவே நாளை முதல் 9-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அம்மாபேட்டையில் இருந்து வரும் பஸ்கள், பட்டை கோவில் வலதுபுறமாக திரும்பி, டவுன் ரெயில் நிலையம், முள்ளுவாடி கேட், கலெக்டர் அலுவலகம், ராஜாஜி சிலை, கொரோனா ரவுண்டானா, கோட்டை மைதானம், அப்சரா இறக்கம், குண்டு போடும் தெரு வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பஸ் நிலையத்தின் முதல் தளத்திற்கு செல்லும் பஸ்கள், கலெக்டர் அலுவலகம், ராஜாஜி சிலை, அப்சரா இறக்கம் வழியாக பழைய பஸ் நிலையம் செல்ல வேண்டும். திருச்சி ரோடு வழியாக வந்து செல்லும் பஸ்கள் வழக்கம் போல் செல்லலாம். பழைய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பஸ்கள், காந்திசிலை, புலிகுத்தி சந்திப்பு, அப்சரா இறக்கம், கோட்டை மைதானம், சுகவனேசுவரர் கோவில், புதிய மேம்பாலம், சுந்தர் லாட்ஜ் வழியாக செல்லலாம். திருவள்ளுவர் சிலை வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. காந்தி சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story