ஆம்புலன்சில் ‘குவா குவா
Vellore King 24x7 |6 Aug 2024 5:12 AM GMT
பேரணாம்பட்டு அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணவேணி கர்ப்பிணியானார். அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ உதவியாளர் வெங்கடேசன், டிரைவர் ஜெயக்குமார் விரைந்து சென்று அவரை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சுமார் 28 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து காட்டுப்பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் பிரசவம் பார்த்தார். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.பின்னர் தாயையும், குழந்தையையும் பேரணாம்பட்டில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு வட்டார மருத்துவ அலுவலர் கலைசெல்வி, டாக்டர் இலக்கியா மற்றும் செவிலியர்கள் மருத்துவ சிகிச்சையளித்தனர். பின்னர் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story