முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில்
சிவகங்கை மாவட்டம், வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், 5 பிரிவுகளில் மாவட்ட/மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25.00 கோடி உட்பட 59.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. மேலும், இப்போட்டிகளில் மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1.இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25ஆயிரமும் வழங்கப்படவுள்ளது மற்றும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன்முறையாக நான்காம் இடம் பெற்றவருக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். இப்போட்டிகளில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லுாரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க வருகின்ற 25.08.2024க்குள் முன்பதிவு செய்திடல் வேண்டும். எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திடல் வேண்டும். குறிப்பாக, இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதுமட்டுமன்றி, தாங்களாகவோ தங்கள் பள்ளி, கல்லுாரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிவகங்கை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703503 என்ற எண்ணிலோ அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story