கைத்தறி நெசவாளர்கள் ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் இன்றியமையாதவர்களாகவும், தவிர்க்க முடியாதவர்களாகவும் உள்ளார்கள். தேசிய கைத்தறி தின விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உரை
Tiruchengode King 24x7 |7 Aug 2024 8:15 AM GMT
கைத்தறி நெசவாளர்கள் ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் இன்றியமையாதவர்களாகவும், தவிர்க்க முடியாதவர்களாகவும் உள்ளார்கள். தேசிய கைத்தறி தின விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உரை
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, 103 பயனாளிகளுக்கு ரூ.52.25 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாதெரிவித்ததாவது, தேசிய கைத்தறி தினமானது, 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2015 வருடம் முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றயை தினம் 10-வது தேசிய கைத்தறி தினத்தினை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் மிக முக்கிய அடிப்படை தேவையாகும். அந்த வகையில் உடை உற்பத்தி மேற்கொள்ளும் நெசவு தொழில் இன்றியமையாத ஒன்றாகும். நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் நெசவு தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. இதில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கைத்தறி நெசவளார்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் சிறு ஜவுளி பூங்கா அமைத்திட 50 சதவிகித மானியத்தில் ரூ.5.00 கோடி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு கடனுதவி, கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசின் சார்பாக செயல்படுத்தி வருகின்றது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து, சிறப்பாக நெசவு தொழில் மேற்கொள்ள வேண்டும். நெசவாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நெசவாளர்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு கைத்தறி கண்காட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துணி இரகங்களான இராசிபுரம் பட்டு சேலைகள், இளம்பிள்ளை மற்றும் ஆர்.புதுப்பாளையம் பருத்தி சேலைகள் மற்றும் காட்டன் கோர்வை சேலைகள், கைத்தறி வேட்டி இரகங்கள், கைத்தறி துண்டுகள், பவானி ஜமுக்காளம், பெட்சீட்கள் மற்றும் கால்மிதி (மேட்) ஆகிய இரகங்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் தள்ளுபடி மானியத்துடன் விற்பனை செய்யப்படவுள்ளது. கைத்தறி நெசவாளர்கள் அரசின் அனைத்து திட்டங்களையும் முழுமையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, இன்றைய தினம் முத்ரா கடன் திட்டத்தின் சார்பில் 73 நெசவாளர்களுக்கு ரூ.31.00 இலட்சம் கடனுதவி, மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.16.00 இலட்சம் மதிப்பில் கடனுதவி, கைத்தறி குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் தறி கூடம் அமைத்திட 5 நெசவாளர்களுக்கு ரூ.2.85 இலட்சம் நிதி உதவி, 10 நெசவாளர்களுக்கு ரூ.60,000/- மதிப்பில் தறி உபகரணங்கள், 10 நெசவாளர்களுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பில் ஜக்கார்டு இயந்திரங்கள், 1 நெசவாளருக்கு ரூ.30,000/- மதிப்பில் தறி என மொத்தம் 103 நெசவாளர்களுக்கு ரூ.52.25 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு, உதவி இயக்குநர் கைத்தறித்துறை திரு.பழனிகுமார், கைத்தறி நெசவாளர்கள் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story