"கோக்கலை கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி"

கோக்கலை கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி
கோக்கலை கிராமத்தில், அட்மா திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
எலச்சிபாளையம் வட்டாரம், வேளாண்மைத்துறையின் சார்பில், அட்மா திட்டத்தின் கீழ், கோக்கலை கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனம், நிர்வாகம் மற்றம் செயல்பாடுகள் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில், அட்மா குழு வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு தலைவர் திரு.தங்கவேல் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில், வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.ஜெயமாலா அவர்கள் தலைமை வகித்து வேளாண்மைத்துறை சார்ந்த மத்திய, மாநில திட்டங்கள், நுண்ணீர் பாசனம், விதைப்பண்ணை முறைகள், மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் இடுபொருட்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். சின்னமணலி இயற்கை உழவன் உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.நந்தினி அவர்கள் கலந்து கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனம், நிர்வாகம், செயல்பாடுகள், இயற்கையான முறையில் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி லாபம் பெறுதல் போன்றவற்றை பற்றி விரிவாக குழு விவசாயிகளுக்கு கூறி விளக்கமளித்தார். வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் திரு.பாலலிங்கேஸ்வரன் அவர்கள் இ.சந்தை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் பற்றி விரிவாக கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு.திவாகர் அவர்கள் உழவன் செயலி பதிவிறக்கம், பயன்பாடுகள் மற்றும் அட்மா திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திருமதி.வாசுகி மற்றும் திரு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story