பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம்
Sivagangai King 24x7 |9 Aug 2024 8:06 AM GMT
சிவகங்கை மாவட்டம், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் - மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் மற்றும் மதுரை வருமான வரி கூடுதல் ஆணையர் ஸ்ரீதரன், மதுரை வருமான வரித் துறை துணை ஆணையர் மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் வருமான வரி தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடித்தரல் வேண்டும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான தேவைகள் அதிகரித்து வருவதால், நவீன தொழில்நுட்பங்களை கையாளவதற்கான முறைகளை முழுவதுமாக முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இணையதளத்தில் 24G மற்றும் 24Q பதிவேற்றம் செய்யும் முறை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை மற்றும் வருமான வரி கணக்கினை காலதாமதமாகவோ அல்லது தவறாகவோ அல்லது சரியான தொகையை விட குறைவாகவோ தாக்கல் செய்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை வாய்மொழியாகவும், காணொளி (PPT) வாயிலாகவும் இக்கூட்டத்தில் துறை ரீதியாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, குறிப்பாக ஊதியப் பட்டியலில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமாக எடுத்துரைக்கப்படும் அனைத்து கருத்துக்களையும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உள்வாங்கி, அனைத்து விபரங்களையும் தெளிவாக அறிந்து கொண்டு, தங்களுக்கு பயனுள்ள வகையில் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், தங்களுக்கு தேவையான கூடுதல் விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். அதற்குரிய விளக்கத்தினை வருமான வரித்துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில், மாவட்டக் கருவூல அலுவலர் கண்ணன், வருமான வரித்துறை அலுவலர் வெங்கடேஸ்வரன் (மதுரை), மாவட்டக் கருவூலம் மற்றும் எட்டு சார்நிலைக் கருவூலங்களில் பணிபுரியும் உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story