பள்ளி மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு:
T.gode (Mallasamudram) King 24x7 |10 Aug 2024 2:17 PM GMT
அரசு பள்ளிகளை நாம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் முன்மாதிரி பள்ளியாக உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொன்னையார் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இன்று (10.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பெற்றோருக்கான மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், அரசுப்பள்ளி மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம், விலையில்லா மிதிவண்டி, புத்தகப்பை, சீருடை, நோட் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகின்றார்கள். மேலும், அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அரசின் திட்டங்களை அனைவரும் பயன்படுத்தி கொண்டு அரசு பள்ளிகளை நாம் அனைத்து பள்ளிகளுக்கும் முன்மாதிரி பள்ளியாக உருவாக்கிட வேண்டும். அரசுப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஆசிரியர் உள்ளிட்டோர் சொந்த குழந்தைகளை போல் அர்பணிப்பு உணர்வோடு நன்கு கவனித்து கொள்கிறார்கள். குழந்தைகளின் செயல்பாடுகளை தினந்தோறும் கண்காணித்து வருகின்றார்கள். அவர்களுக்கு உடல் மற்றும் மனதளவில் ஏதேனும் குறைகள் இருப்பின் உடனடியாக கண்காணித்து சரிசெய்கின்றார்கள். பள்ளி அளவில் மட்டுமே அனைவரும் தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். ஆனால் கல்லூரி மேற்படிப்பு பயில சிறந்த கல்லூரிகள் என அரசு கல்லூரியை அனைவரும் தேர்வு செய்கின்றனர். அரசுப்பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகள், பேருந்து வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து தேவைகளும் நிறைவேற்றிட பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றி பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்திட அனைவரும் பங்காற்றிட வேண்டும். குழந்தைகளுக்கு புத்தக படிப்பு மட்டுமின்றி, விளையாட்டு போட்டிகளிலும் ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மன தைரியத்துடன் வளர்த்திட அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டியது நம் கடமை. குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஒரு பெண் போட்டியாளரின் மன தைரியம் உலகளவில் பாராட்டப்பட்டு வருகிறது. நம் குழந்தைகளையும் அவ்வாறு தோல்வியை கண்டு பயப்படாத வகையில் தைரியமாக போராட்ட கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்வியையும் ஏற்று கொள்ளும் வகையில் தயார்படுத்திட வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தான் குழந்தைகளை செதுக்கும் சிற்பிகள். இன்றைய இணைய தள உலகில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். மாணவ, மாணவியர்கள் அவற்றில் உள்ள நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு தங்கள் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளிக்கு தேவையான கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி கொண்டு தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை தரத்தையும், பள்ளியையும் மேம்படுத்திட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story