குமாரபாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு எம்.பி. பங்கேற்று இலவச சைக்கிள்கள் வழங்கினார்
Komarapalayam King 24x7 |14 Aug 2024 12:51 PM GMT
நீட் தேர்வில் முறைகேடு, தமிழக மாணவர்கள் புறக்கணிப்பு அரசு பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிய விழாவில் எம்.பி. பிரகாஷ் பேச்சு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியை காந்தரூபி தலைமையில் நடந்தது. ஈரோடு எம்.பி. பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) விஜயன், மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் பாஸ்கர், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் ஞானசேகரன், குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட 10 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எம்.பி. பிரகாஷ், ஆயிரத்து 187 சைக்கிள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: கடந்த தேர்வில் 10ம் வகுப்பில் 96 சதவீதம், 12ம் வகுப்பில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். இந்த அரசு பள்ளியில் ஆயிரத்து 339 பேர் கல்வி பயில்வது என்பது பெரிமைக்குரிய விஷயம். 2018ம் ஆண்டில் தூய்மைக்கான விருது பெற்றமைக்கு பாராட்டுக்கள். விளையாட்டு போட்டிகளில் பல்வேறு சாதனைகள் பெற்றுள்ளது, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி டாக்டருக்கு ஒருவர், பல் மருத்துவத்திற்கு ஒருவர், பொறியியியல் படிப்புக்கு 22 பேர் தேர்வானதும், வரவேற்கத்தக்கது. நீட் தேர்வில் ஒரு மாணவி 619 மதிப்பெண்கள் பெற்றுள்ளது போற்றுதலுக்குரியது. நீட் தேர்வை நாங்கள் எதிர்க்க காரணம், தேர்வில் முறைகேடு, தமிழக மாணவர்களை புறக்கணிப்பு செய்து, வட மாநில மாணவர்களை தேர்வு செய்வது போன்ற செயல்களால்தான். அரசு பள்ளியில் படித்து தான் இன்று உங்கள் முன் எம்.பி.யாக நிற்கிறேன். தமிழக முதல்வர் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டுவந்துள்ளார். தமிழக அரசு செய்து வரும் பல்வேறு உதவிகள் மூலம், அரசு பள்ளியிலும் மாணவ, மாணவியர்கள் சாதிக்கலாம். படிப்பு தவிர விளையாட்டிலும் கவனம் செலுத்தி, அதிலும் பல சாதனைகள் புரிய வேண்டும். அதற்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி, பேச்சாளர் அன்பழகன், மகளிரணி ராதிகா, தேவி, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story