குறும்படப்போட்டி நடைபெறவுள்ளது.

குறும்படப்போட்டி நடைபெறவுள்ளது.
ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய இளைஞர்கள் தினமான ஆகஸ்ட் 12 ஆம் நாளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ”போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற பொருண்மையில் பெருந்திரள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நாடு முழுவதும் நடைபெற்றது. நமது பெரம்பலூர் மாவட்டத்தில் இந்நிகழ்வில் சுமார் 70,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறும்படப்போட்டி நடைபெறவுள்ளது. போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையிலும், போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த குறும்படங்கள் அமைந்திட வேண்டும். 5 நிமிடத்திற்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். இந்தப்போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் குறும்படங்களை dsection.tnpmb@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு கூகுள் டிரைவ் இணைப்பாக (Google Drive Link) அனுப்பிட வேண்டும். போட்டியாளர் பெயர், முகவரி, மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களையும் அனுப்ப வேண்டும். குறும்படங்களை நேரில் வழங்க விரும்புவோர் உதவி ஆணையர் (கலால்), முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் – 621212 என்ற அலுவலகத்தில் வழங்கலாம். குறும்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.09.2024 ஆகும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து குறும்படங்களும் தேர்வுக்குழுவினர் பார்வையிட்டு முதல் மூன்று பரிசுகளுக்குரிய குறும்படங்களை தேர்வுசெய்வார்கள். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இக்குறும்படப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், இரண்டாம் பரிசாக ரூ.7,000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000ம் வழங்கப்படும். பரிசு வழங்கப்படும் விழாவில் மூன்று குறும்படங்களும் மக்களின் பார்வைக்கு திரையிடப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்
Next Story