ராமநாதபுரம் எஸ் பி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்

முதலீடு செய்யும் பணத்திற்கு இரு மடங்கு பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி கிராம மக்களிடம் ரூ 300 கோடி வரை ஏமாற்றிய நிதி நிறுவனம் : முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள உப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, நிதி நிறுவனம் என்ற பெயரில் முதலீடு செய்தால், இருமடங்காக பணம் தருவதாக கூறி தங்களுடைய பணத்தை ஏமாற்றி விட்டதாகவும், தங்களுடைய பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தேவகோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் ( Trueway business service private limited) ஒன்றில் ஒரு மடங்கு பணம் செலுத்தினால் 20 மாதத்தில் இரண்டு மடங்காக திருப்பி கொடுக்கப்படும் என்ற பொய்யான உத்தரவாதத்தை நம்பி கிராம மக்கள் ஒவ்வொருவரும் தலா பல லட்சங்களை முதலீடு செய்ததாகவும் ஒவ்வொருவரும் மூன்று லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நிதி நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி இரட்டிப்பு பணம் தரவில்லை என்றும், தற்போது முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு முதலீடு செய்த பணத்தை கேட்டபோது, தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாங்கள் 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து தற்போது திரும்ப பணம் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், தொடர்ந்து அவர்களிடம் செலுத்திய தொகையை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர். மேலும், அந்த சுற்று வட்டார பகுதி பொது மக்களிடம் மட்டும் ரூ 300 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும், நிதி நிறுவனம் என்ற பெயரில் மோசடியாக செயல்பட்டு வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
Next Story