தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் போட்டி
Salem (west) King 24x7 |20 Aug 2024 10:36 AM GMT
விண்ணப்பிக்க 30-ந் தேதி கடைசிநாள்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1,330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15,000 ரொக்கப் பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. 2024 - 25-ம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். சேலம் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் இருந்தால் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் https://tamilvalarchithurai.tn.gov.in இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து வருகிற 30-ந் தேதிக்குள் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story