அனுமதி பெறாமல் முகாம்கள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை
Krishnagiri King 24x7 |21 Aug 2024 12:14 AM GMT
அனுமதி பெறாமல் முகாம்கள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரித்துள்ளது. மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் NSS, NCC. Scout & Guide மற்றும் JRC போன்ற அமைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறான அமைப்புகளின் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவ்வமைப்புகள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும், மாநில அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு முகாமும், பயிற்சியும் நடத்த ஏற்பாடு செய்யக் கூடாது. பள்ளி அளவிலோ, மாவட்ட மற்றும் மாநில அளவிலோ முகாம்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆண் ஆசிரியர்களும், மாணவியர்கள் பாதுகாப்பிற்கு பெண் ஆசிரியர்களும் சார்ந்த அமைப்பின் விதிமுறைகளின்படி போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாணவ, மாணவியரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதை அனைத்துப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் அலுவலர் தெரிவிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story