சேலத்தில் சொத்து தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை
Salem (west) King 24x7 |21 Aug 2024 8:21 AM GMT
இதுதொடர்பாக அவருடைய சித்தப்பா மகன் கைது
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள திருவாக்கவுண்டனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி தனபாக்கியத்துக்கு ஒரு மகனும், 2-வது மனைவி விஜயலட்சுமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது சித்தப்பா சுப்பிரமணியின் மகன் கோபால் (40) என்பவருக்கும் இடையே தாத்தா பெயரில் உள்ள வீட்டை பிரிப்பது தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு குமார் பிரச்சினைக்குரிய வீட்டை திறப்பதற்கு சென்றுள்ளார். இதனால் குமாருக்கும், கோபாலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த குமாரின் மகன் மணி தகராறை விலக்கிவிட்டு தனது தந்தையை வீட்டுக்கு அழைத்து சென்றார். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற குமார் படுத்து தூங்க தொடங்கினார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் தனது வீட்டுக்கு சென்ற கோபால் அங்கு கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து கொண்டு குமாரின் வீட்டுக்கு சென்றார். ஆத்திரத்தில் இருந்த அவர் அங்கு படுத்திருந்த குமாரின் பின்தலையில் கட்டையால் சரமாரியாக அடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் கோபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குமார் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர்.
Next Story