தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பயன்பெற்று வரும் பயனாளி முதலமைச்சருக்கு நன்றி
Sivagangai King 24x7 |22 Aug 2024 9:26 AM GMT
சிவகங்கை மாவட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பயன்பெற்று வரும் பயனாளி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வாசனை மற்றும் நறுமணப்பயிர்கள் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளி தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், வேளாண் பெருங்குடி மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு ஏற்றாற்போல் பயிரிட்டு அதன் வாயிலாக தங்களது உற்பத்தி பொருட்களை நல்ல விலைக்கு சந்தைப்படுத்தி, லாபம் ஈட்டிடும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்மீகத்திலும், மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய நறுமணப் பயிரான வெட்டிவேர், பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக திகழ்கிறது. அதன் வாயிலாக விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையாகவும் திகழ்ந்திடும் வண்ணம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு (Minimal Processing Unit) 40 சதவீத மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. வெட்டிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயானது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வெட்டிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயானது அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் துறைகளிலும் மருந்துகள் தயாரிக்கும் துறைகளிலும் முக்கியகாரணியாக விளங்குகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வாசனை மற்றும் நறுமணப் பயிர்கள் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு, இந்த நிதி ஆண்டில் புதிதாக விவசாயிகளுக்கு வெட்டி வேர் நடவு பொருட்கள் வழங்கி நடவு செய்யப்பட்டு, பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மானியமாக எக்டேருக்கு ரூ.16,000/- வழங்கப்படுகிறது. அதன்படி, தற்சமயம் வரை திருப்பத்தூர் வட்டாரத்தில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, வேலங்குடி மற்றும் கோட்டையிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் இடங்களில் 25 ஏக்கர் பரப்பளவிற்கு வெட்டிவேர் நடவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அறுவடையாகும் வேர்கள் தோட்டக்கலைத்துறையின் மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வெட்டிவேர் எண்ணெய் பிரித்தெடுக்கும் செயலகத்திற்கு அனுப்பட உள்ளது. மேற்கண்ட திட்டத்தின் கீழ் வெட்டிவேர்- எண்ணெய் பிரித்தெடுக்கும் செயலகம் (Minimal Processing Unit) அமைத்து பயன்பெற்று வரும், வேலங்குடி ஊராட்சியைச் சார்ந்த மோகனப்பிரியா கூறியதாவது நான் திருப்பத்தூர் வட்டாரத்தில் வேலங்குடி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள குருவாடிப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது சிறுவயதிலிருந்தே எனது தந்தை பாண்டியன் நறுமணப் பயிரான வெட்டிவேர் சாகுபடி செய்து வருகிறார். மேலும் வெட்டிவேரிலிருந்து பூஜைக்கு தேவையான மாலைகள் மற்றும் விசிறி, தலையணை, பாய், பூங்கொத்துகள் போன்ற அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயார் செய்து, அருகில் உள்ள மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். எனது தந்தை சிறிய அளவிலான வெட்டி வேர் எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட்டும் வைத்திருந்தார். அதில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெயின் தரம் சர்வதேச சந்தையில் குறைவான விலையை பெற்று வந்தது. அச்சூழ்நிலையில், இதனை மேலும் விரிவுபடுத்திடும் நோக்கில், திருப்பத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி, தோட்டக்கலை பயிர்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு அரசு வழங்கும் மானியம் பற்றி அறிந்து கொண்டேன். அப்போது, தோட்டக்கலைத்துறையின் மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் அனைத்து விபரங்களையும் விரிவாக எடுத்துரைத்து, ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திய எண்ணெய் பிரித்தெடுக்கும் முறையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் எங்களுக்கு விளக்கினார்கள். அதில், துருப்பிடிக்காத எஃகு-னால் ஆன பொருட்களைப் பயன்படுத்தி, வெட்டிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், சர்வேதச சந்தையில் நல்ல மதிப்பு பெறுவது குறித்து எடுத்துரைத்து, எங்களது உற்பத்தி பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய யூனிட் தொடங்குவதற்கும், எஃகு பொருட்களை உபயோகப்படுத்துவதற்கும் பயிற்சியளிக்கப்பட்டு, வெட்டிவேரிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட் ஆரம்பிப்பதற்கு உரிய தொழில்நுட்ப அறிவுரைகளும், வழிகாட்டுதலும் எனக்கு துறை ரீதியாக வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வாசனை மற்றும் நறுமணப்பயிர்கள் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள வெட்டிவேரிலிருந்து அறுவடையாகும் வேர்களை, எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட்டிற்கு விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வெட்டிவேர் ரூபாய் 100 என்கிற விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்க ஒப்பந்தம் பெறப்பட்டு, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக விவசாயிகளும் அறுவடை செய்த வேர்களை உடனடியாக விற்பனை செய்வதன் மூலம் நேரடியாக பயன்பெறுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது. அதன்படி, ஒரு ஏக்கரிலிருந்து பெறப்படும் சுமார் 1.5 டன் வேர் வேரினை உபயோகப்படுத்தும் பொழுது, அதிலிருந்து 13 கிலோ எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ எண்ணெயின் மதிப்பு ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. வெட்டிவேரிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட் (Minimal Processing Unit) தொடங்குவதற்கு தோராயமாக ரூ.30,50,000/- தேவைப்படுகிறது இதில் தோட்டக்கலைதுறையின் மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.10,00,000/- வங்கி பின்னேற்பு மானியமாகவும் வழங்கப்படுகிறது. ஆகவே வெட்டிவேர் எண்ணெய் பிரித்தெடுக்கும் அலகு மூலம் வெட்டி வேர் பயிர் செய்த விவசாயிகள் பயன்பெறுவதுடன் அவர்களது விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால், அதிக இலாபமும் கிடைக்கப்பெறும். தோட்டக்கலைத்துறை தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு (Minimal Processing Unit) மானியம் வழங்குவதன் மூலம், என்னைப்போன்ற புதிய தொழில்முனைவோரையும் உருவாக்குவதற்கு இத்திட்டம் அடிப்படையாகிறது. எங்களது குடும்பம் மட்டுமன்றி விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான இதுபோன்று திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மோகனப்பிரியா தெரிவித்தார்.
Next Story