தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகி கருணைத்தொகை பெறலாம்

தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகி கருணைத்தொகை பெறலாம்
சிவகங்கை மாவட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களாக தேசிய தரவு தளத்தில் பதிவு பெற்ற வாரிசுதாரர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் இந்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் (National Data Base for Unorganized Workers-eSHRAM-NDUW) என்ற ஒரு தரவுதளத்தை (Data Base) உருவாக்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள் , மர ஆலைத் தொழிலாளர்கள், உள்ளுர் கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்ற 370 வகையான ESI,PF பிடித்தம் செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை https://eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் அனைத்து பொது சேவை மையங்களிலும் (Common Service Centre) மற்றும் அனைத்து இ-சேவை (TNeGA) மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. Eshram Portal-லில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்திடல் வேண்டும். இத்தரவு தளத்தில் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்கு 18 முதல் 59- வயதிற்க்குள் இருத்தல் வேண்டும். பதிவு செய்வதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் OTP மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி, இத்தரவுகளைப் பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN (Universal Account Number) என்ற 12-இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம்பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து பெறவேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். eSHRAM / NDUW தரவுதளத்தில் தற்போது வரை 2,38,117 அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு eSHRAM / NDUW தரவுதளத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.03.2022க்குள் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், விபத்தில் இரு கண்கள் அல்லது இரு கைகள் அல்லது இரு கால்கள் இழந்தவர்கள் அல்லது ஒரு கை மற்றும் ஒரு கால் அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தவர்களுக்கு ரூ.2 இலட்சமும், ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் இழந்தவர்களுக்கு ரூ.1 இலட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படுகிறது. eSHRAM / NDUW தரவுதளத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.03.2022க்குள் விபத்தினால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தாலோ, அத்தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணைத் தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story