அம்மன் சிலையை அகற்ற எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
Villuppuram King 24x7 |22 Aug 2024 1:18 PM GMT
கிராம மக்கள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஈயகுணம் கிராமத்தில் இருந்த கல் வடிவத்தை அம்மச்சார் அம்மனாக கிராம மக்கள் நான்கு தலைமுறையாக வழிபட்டு வருகின்றனர்.அந்த இடத்தில் கோவில் கட்ட முடிவு செய்து சுவர் எழுப்பினர். இன்னும் மேல் தளம் அமைக்காத நிலையில், தற்போது, அம்மச்சார் அம்மனை கற்சிலையாக வடிவமைத்து, நேற்று முன்தினம் இரவு அம்மன் சிலையை கிராம மக்கள் உள்ளே வைத்தனர்.இந்த கோவில் அருகே உள்ள முனியம்மாள் என்பவர் தன் வீட்டிற்கு இடையூறாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.கோர்ட், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்ட நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற நேற்று காலை 11:30, மணிக்கு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் தாசில்தார் தனலட்சுமி அங்கு சென்றார்.இதனையறிந்த கிராம மக்கள் திரண்டு ஆக்கிரமிப்பு மற்றும் அம்மன் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மதியம் 12:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, 3 நாட்கள் அவகாசம் கொடுப்பதாக தெரிவித்து பகல் 1:00 மணிக்கு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Next Story