திருச்சியில் ரயில் விபத்து போன்று செட்டிங்!

தெற்கு ரயில்வே நடத்திய ஒத்திகையால் பரபரப்பு
திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை விரைவாக செயல்பட்டு எப்படி காப்பது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டது போன்று தண்டவாளத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் பொதுமக்கள் சிறிதுநேரம் பரபரப்படைந்தனர். அதன்பிறகு தெற்கு ரயில்வே சார்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என தெரிந்ததும் நிம்மதிப்பெருமூச்சுடன் கலைந்து சென்றனர். இயற்கை பேரிடர் மற்றும் ரயில் விபத்துகளின் போது, பயணிகளை மீட்பது, பாதுகாப்பாக கொண்டு செல்வது, விரைந்து நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் பேரிடர் மீட்பு பயிற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது. திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் நடைபெற்ற பயிற்சியில், ரயில்வே பாதுகாப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 200க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த பேரிடர் மீட்பு பயிற்சிக்காக, ரயில் விபத்து நடைபெற்றது போன்று பெட்டிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பின்னர், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மீட்பு பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் பயணிகளை மீட்கும் அவசர கருவிகளுடன் நிவாரண பணியில் ஈடுபடுவது போன்று ஒத்திகை மேற்கொண்டனர். இதன் மூலம் விபத்து காலங்களில் குறைந்த நேரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட முடியும். தொடர்ந்து விபத்தின் போது விளக்குகள் அமைத்தல், தடம் புரண்ட பெட்டியில் இருந்து பயணிகளை மீட்டல், அவசர கட்டுப்பாட்டு மையம் அமைத்தல், காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்குதல், போக்குவரத்தை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்தும், அனைத்து துறை பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story